Friday, June 11, 2004

பரிசு

பரிசு
உமது முகமறியேன் மொழியறியேன்
பெயரறியேன் விருப்பு வெறுப்புமறியேன்
உன் நலன் விழைவோர் முன்னிலையில்
அந்நியனாய் நின் கரம் பற்றுவேனோ
நானறியேன் வதுவையே ! உமை
நேசிக்க வாய்ப்பு கனியும் அந்நாளில்
பரிசுத்தமாய் எனை பரிசளிப்பேன்.
- பரிதிசெல்வன்
(பா.இரவிக்குமார்)

Sunday, April 18, 2004

நதியின் வேட்கை


நதியின் வேட்கை

குறிஞ்சி மண்ணில் களிப்புற்வே விண்ணிலிருந்து அதி

விரைவாய்ப் பயணித்து தன் மத்தகங்களை யசைத்து

குதூகலமிட்டு நடைபயிலும் களிறினங்களை பரவசப்

படுத்தி ஏனிந்தக் கருவினங்கள் அய்யன் காமத்துப்

பால் பருகவில்லையெனும் பூவினங்களின் ஏக்கத்தைப்

பரிகசித்து கரிசல் மண்ணை வளப்படுத்தி என்

பணிதனில் வெகுவாய் மகிழ்ந்திட்டேன் !



ஏற்றமிகு திருநாட்டில் தத்து முளைத்தது காண் !

சுற்றம் உடமையிழந்து நற்றமிழ் நன்ம‌க்கள் புலம்

பெயர்ந்தனரே  என்று இத்தவ மண்ணில் வசந்தம்

அரும்புமேயென ஏங்கிய நாட்கள் ஏராளம் ஏராளம்



எழில்மிகு உடைவிலா முகில் ஒளித்தது காண்

இடர்மறந்து தோள்சேர்ந்து ஒற்றுமையாய்

உவகையுடன் செயலாற்றிடுவீர் தரணிபாடும்

திருத்தலமாய் தமிழீழத்தை மாற்றிடுவீர்

வேட்கையுடன் நான் பாலாவி

- பரிதிசெல்வன்

(பா.இரவிக்குமார்)

Monday, March 29, 2004

சிந்தனைத் துளிகள்

எனது சிந்தனைகளின் ஊற்றாய் சிற்சமயங்களில் கவிதைகளும், குறிப்புகளும் மலர்வதுண்டு. தமிழ் கூறும் நல்லுலகம் இவையாற் சிறிது பயன்பெறுமாயின், மானுட சமூகத்திற்கு சிறிதேனும் பயனுள்ளதாக என் வாழ்வு கழிந்ததென பெருமகிழ்வடைவேன்.
வாழிய தமிழ் ! வளர்க மானுடம் !!